இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 8, 2017

என்னவளே.. அடி... என்னவளே !!


இன்று ....எங்களது மணநாளில்..... எனது இரண்டாம் பிறந்தநாளில் ...என்னவளுக்கு சமர்ப்பணம் .... என்னாலான சின்னஞ் சிறு( நன்றிக்கடன் ) பரிசு !

1116)
உறவுபல உண்டென்ற போதிலும் என்உணர்வு,
ஒன்றுவது உன்னிடத்தில் தான்


1117)
தனக்காகக் காத்திருந்தேன், தன்னிடமே சேர்ந்தேன்,
உனக்குள் எனைக்கண்ட நான்


1118)
கடைசிவரை உன்நிழலில் நானிருக்க வேண்டுவதே
என்கடைசி ஆசையாம் ஆம்


1119)
மூளையெல்லாம் உன்நினைவுள் மூழ்கிவிட, கண்காணும்
மூலையெல்லாம் உந்தன் முகம்


1120)
தேனுள் அடையைப்போல், மீனுள் கடலைப்போல்,
என்னுள் விடையாய் அவள்

September 3, 2017

அனிதா : மனிதா வா ,இனியோர் அனிதா வரவேண்டாம், தடுக்கும் அணி_தா வா :

அனிதா :
என்குறள் 1096 - 1097 :
சிறுகனவை ஏற்றிப் பெருங்கனலாய் மாற்றிப்
பறந்ததுஎம் அக்னிக்குஞ்சு ஒன்று

தட்டிக் கொடுக்காமல் தட்டிவிட்ட தால்இன்று,
சரிந்த சரித்திரம்பார் இங்கு


அனிதாவின் வாய்மொழியும் கேள்வியும் :
என்குறள் 1098 - 1101 :
எதையோ படிக்கவைத்து, வேறெதிலோ தேர்வுவைத்தால்
சாகாமல் என்செய்வேன் சொல்

நேற்றுவரை தோற்றவர்தான் தொங்கினார், நூறுசதம்
வென்றஎனைத் தொங்கவைத்தீர் இன்று

தரவரிசை என்று, வரும்வரிசை கண்டு
கெட்டதென் குட்டிக் கனவு

தூக்கிவிடக் கேட்டுவந்தேன் மன்றம்முன், தூக்கிலிட்டுக்
கொள்என்று சொன்னது அது



மனிதா வா ,சேர்ந்தோர் அணி_தா வா :
என்குறள் 1092 - 1109 :
நோட்டையும் மாட்டையும் நீட்டையும் காட்டியுனை
பூட்டிவைக்கப் பார்ப்பாரை ஓட்டு

நீட்டென்றால் நீட்டவும் ஆட்டென்றால் ஆட்டவும்
வீட்டுநாய் இல்லையடா நீ

நீட்டென்றால் நீட்டும் குரங்காநீ, நீட்டி
முழங்கியுன் நோக்கத்தைக் காட்டு

விலக்குப் பெறச்சென்று விட்டு, விலைபோனோர்
வந்தால் வரவேற்போம் வா

வாதிடச் சென்றுவிட்டு, பேரம் முடிந்துவந்து,
சாதித்தக் கதைசொல்வார் பார்

ஊர்பார்க்க வேண்டுமென்று முந்திவந்து சந்திநிற்போர்
வேரறுத்து ஊதுவோம் சங்கு

பேத்தி வயதொத்தப் பிள்ளையைப் பெண்மணியாய்ப்
பார்ப்போரிங்கு என்னஇனம் கூறு

’’மருத்துவம் தான்படிப்பா?’’ என்றோர் மருத்துவரே
கூறினால் எங்கோ பிழை



’வ’ருத்துவர் ’’கிசுகிசு’’ :
என்குறள் 1110 - 1115 :
ஒதுக்கீட்டால் மேலேறி வந்துவிட்டு, அற்ப
ஒதுக்கீடிங்கு ஏனென்பார் பார்

ஆள்வோர் மனம்வந்து வீசுவதை வைத்துனது
வாழ்வினை ஓட்டென்பார் பார்

எச்சில் எறிவார் எனத்தெரிந்தால் பொச்சையும்
நக்கிவிடும் நாயாகென் பார்

இப்படித்தான் காண்கனவு என்றபின்னும் எப்படியோ
கண்டுகொண்டால் உன்தப்பென் பார்

சோற்றைப் பெறும்பொருட்டுச் செத்தவர்மேல் சேற்றையள்ளி
வீசவந்து முன்நிற்பார் பார்

மருத்துவரின் தந்தையை ஓர்அரசு ஊழியராய்
மாற்றியதைப் போற்றென்பார் பார்

August 31, 2017

பாட்டி வைத்தியம் - 6 _ பெண்ணுக்குக் கைமருந்து !


தாய்மை:
1086)
கருவுறும் காலத்தில் கேழ்வரகு சேர்த்தால்
பெருகும் இரும்பின் வரவு


1087)
நொய்யரிசி வெந்தயக் கஞ்சியால் தாய்ப்பால்
சுரந்துவரும் மிஞ்சும் அளவு


மருந்து:
1088)
கருஞ்சீ ரகம்,முள் முருங்கை கருப்புஎள்சேர்
மாத விலக்காகும் சீர்


1089)
பப்பாளி அன்னாசி கத்தரி எள்ளை,
விலக்காகும் நாளில் விலக்கு


1090)
கூடும் உடலெடையை, கட்டுக்குள் வைத்திருந்தால்
நீர்க்கட்டி நீர்த்து விடும்


1091)
வல்லாரை ஆட்டுப்பால் சேர்த்தரைத்து உண்போர்க்கு
வெள்ளைப் படல்நிற்கும் ஆம்


1092)
வெள்ளைப் படலுக்கு எருமைத் தயிரோடு
அருகம்புல் கீழாநெல் லி


1093)
நெல்லியுடன் தேனும் தொடர்ந்துண்போர்க்கு ஆகுமது
வெள்ளைப் படலுக்குத் தீர்வு


எச்சரிக்கை:
1094)
பூண்டும் மிளகாயும் வெப்பத்தைத் தூண்டும்
கெடுமாம் கருவோடு விந்து


1095)
குருதி வெளுக்கும் கருவும் குலையுமாம்
குங்குமப்பூ கூடும் பொழுது


நடி(த்)......தேன் ! , விட்டுக்கொடு(த்)..... தேன் !!


1081)
பெண்மகிழ ஆணவனும், ஆண்நெகிழப் பெண்ணவளும்
வாழும் உலகுதான் வீடு


1082)
இல்லாளை வெல்வதைத் தன்இலக்காய்க் கொள்வான்ஆண்
தோற்பதுபோல் காட்டுவாள் பெண்


1083)
ஏமாற்றி விட்டதாய்ப் பெண்நினைத்து, ஏமாந்து
விட்டதாய் நான்நடித்தால், தேன்

1084)
என்முன்னால் தூங்குவது போல்நடிக்கும் உன்னை
எழுப்புவது போல்நடிப்பேன் நான்


1085)
எழுப்புவது போல்நடிக்கும் உன்முன் மெதுவாய்
விழித்தது போல்நடிப்பேன் நான்


August 29, 2017

நபிமொழி - 22 :- மது !

என்குறள் / துரைக்குறள் :- 1071 - 1080

மதுவை ஒதுக்கு !
உருமாற்றம் செய்து மதுவை உணவாய்த்
தருவதற்கும் உண்டு தடை
......................முஸ்லிம் 4014

பயம்தரும்நோய் ஒத்த மதுவை, மருந்தாய்ப்
பயன்படுத்த உண்டு தடை
........................முஸ்லிம் 4015

மது,சூது கொண்டுதரும் கேடென்பது இம்மை
மறுமையைத் தாண்டிப் பெரிது
................... குர்ஆன் :02:219

போதை தருமனைத்தும் மார்க்கத்தின் பாதையில்
தள்ளிவைக்கப் பட்டது தான்
......................முஸ்லிம் 4067

திராட்சையுள், பேரீச்சை யுள்,உணவும் நன்மைத்
தராதழிக்கும் பாழ்மதுவும் உண்டு
..................குர்ஆன் :16:76



மதுவோடு வரும் அழிவு !
தொழுவாய் முறையாய், தவிர்ப்பாய்த் தொழுகயை,
போதைத் தெளியாத போது
......................குர்ஆன் :04:43

மதுவை அருந்தத் தடைஉண்டு அதுபோன்று
விற்கவும் உண்டு தடை
...............................முஸ்லிம் 3220

மதுவுக்கு உருதருவோர் விற்போர் பருகுவோர்,
சுமப்பார் இறையின் பழி
..............................இப்னுமாஜா 3371

மதுவை அருந்தி மதியை இழப்போர்,
மிதிக்கப் படவேண்டும் ஆம்
...........................புகாரி 2316

குடிப்போர்க்கு மும்முறை சாட்டையடி காட்டு,
தொடர்வோரை சாவுக்குள் ஓட்டு
....................... அபுதாவூத் 3886

August 23, 2017

தாழ்வுமனம் தவிர்...!


1066)
’என்னடா வாழ்விது’ எனத்தாழும் எண்ணம்கொல்,
என்னுடைய வாழ்விதெனக் கொள்


1067)
என்ன முடியும் உனக்கென்போர் நாணக்கேள்,
‘என்ன முடியாது எனக்கு’


1068)
சாதிக்க வில்லையெனச் சோராதே, இன்றுலகில்
வாழ்வதே சாதனைதான் போ


1069)
எதனால் இழக்கிறாய் உன்தெம்பு, எதுவுமிங்கு
சாத்தியமே சத்தியமாய் நம்பு


1070)
வரம்தந்து வாழ்த்த முடியும் உனக்கு,
வரம்கேட்டு நிற்பது எதற்கு

இயற்கையின் கடிகாரங்கள் / ’அலாரம்’கள்


1061)
கரிச்சான் குயில்தன் குரலை எழுப்பும்
அதிகாலை மூன்று மணிக்கு


1062)
குயில்தன் குரலெடுத்துக் கூவும் அதிகாலை
நான்குமணி ஆன உடன்


1063)
நான்குக்கும் ஐந்துக்கும் மத்தியில் தான்சேவல்
கூவும் பெருங்குரலில் ஆம்


1064)
காகம் குழுவாய்க் கரையத் துவங்கினால்
ஆகும் மணிஅப்போது ஐந்து


1065)
சரசர வென்றுமீன் கொத்திச் சிறகசையும்
போது மணிஆகும் ஆறு