இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 22, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


தெரிந்ததைச் சொல்வேன் :)
146)
தோளின் வலிமைதான் பேரழகு; கண்மூடித்
தோலின்முன் வீழும் உலகு

147)
வலியறியாப் பாறையையும் போகும் வழியறியாப்
பாதையையும் தேரா(து) ஒதுக்கு

148)
திசைஎல்லை எல்லாமும் தேர்ந்தும் விசையில்லை
என்றால் தவறும் இலக்கு

149)
பிஞ்சில் பழுப்பதற்(கு) அஞ்சு; வகுத்ததை
மீறும் எதுவுமே நஞ்சு;

150)
திக்கெட்டைத் தாண்டி சிறகை விரித்தாலும்
கொப்பில் உறங்குமாம் கொக்கு

July 16, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


என் உலகம் :
141)அப்பா :

சிந்தனையின் வித்தவர்; நீவாழ தன்னையே
விற்றவர்;உன் தந்தையைப் போற்று

142) அம்மா :
மடியில் வளர்த்தாள்; வடிவம் கொடுத்தாள்
விடியல் அவள்தான் உனக்கு

143)
உறியாய் தறியாய் திரியாய் இருப்பாள்
உயிரும் தருவாள் உனக்கு

144)
கொடியிலுயிர் தந்து மடியிலூண் தந்துன்
படியாய் இருப்பாள் பணிந்து

145) இரண்டாவது அம்மா :
நிலவுக்கும் உண்டாம்ஓர் நாள்ஓய்வு; நில்லாள்;
நிலவுக்கும் மேலாம் இவள்

July 14, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


உள்ளத்தில் உள்ளதைச் சொல்வேன் :

136)
நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி

137)
தூங்க முடியா நிலைவரும்; தாங்க
முடியா பொருள்சேரும் போது

138)
வனத்துள் அலைந்தாலும் அந்திமத்தில் கொண்ட
இனத்துள் அடைந்தால் சிறப்பு

139)
நிறத்தால் உயராதாம் உன்தரம்; உள்ள(த்)
திறனைத்தான் சார்ந்த(து) அது

140)
நம்புவ(து) எல்லாமும் நன்றென்(று) இருப்பதில்லை
நன்றென்று தோன்றுவதை நம்பு

July 11, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


என்னவளே...எல்லாமும் ஆனவளே:


131)
கட்டுவாள்; பின்பதறித் தன்கையால் பொத்துவாள்;
குத்திவெளி வந்திருக்கும் என்று

132)
கொடுத்திணைத்தாள் வந்து; பிடித்தணைத்தாள் தந்து;
கொடுத்ததைக் கேட்பாளோ பின்பு

133)
தன்னைக் கொடுத்தவுடன் என்னை எடுத்துவிட்டாள்;
உண்மையில் யாருக்(கு) இழப்பு

134)
சந்தேகம் ஏதுமில்லை; உன்தேகம் மட்டும்தான்
என்தாகம் தீர்க்கும் விருந்து

135)

சேர்வோம் எனும்உன்ஓர் சொல்தானே என்மனச்
சோர்வை அகற்றும் மருந்து

( நன்றி : கரு : எம் முன்னோர் :)

July 8, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!




கண்ணென்ன கண் :


126)
நாணுமவள் கண்பார்க்க நானும்தான் காத்திருப்பேன்;
நாளும் நிகழும் இது

127)
மரம்கொத்தும் கூர்அலகும் மண்டியிட்டுத் தோற்கும்
மனம்குத்தும் உன்ஓர்கண் முன்பு

128)
மைபூசும் உன்கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்
பொய்பேசும் உன்உள் மனது

129)
கண்டவுடன் பற்றிவிடும் கற்பூரத் துண்டு
கலந்த கலவையவள் கண்

130)
சீர்கெடுக்கும் மையிட்டக் கண்ஒன்று; சீர்கொடுத்தென்
சீக்கெடுக்கும் மற்றது வந்து

July 3, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


முதுமை அழகு :

121)
கணக்கில்லை என்னவர் காட்டும் இடக்கு;
கனக்கவில்லை இன்றும் எனக்கு

122)
இறுக்கம் நிறைந்த(து) இளமை! இருக்கட்டும்!
இந்தச் சுருக்குக்கே(து) ஈடு

123)
முகவரி இல்லாது முன்புண்டு; இன்றுன்
முகவரிக்குள் வாழ்கிறேன் நன்று

124)
எனக்கென வீழும் முதல்மழையும் நீ!எனக்குள்
வாழும் முதல்துளியும் நீ

125)
அன்று பதுமையாய் நீஅழகு: இன்றுன்
முதுமை அழகோ அழகு