இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 31, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்



அன்பே..அன்பே : / இன்பம்
266)
நானாக நீயானால் நீயாக நானாவேன்;
தானாகத் தேனாகும் வாழ்வு


267)
பூவுக்கு நாராக பூமிக்கு நீராக
ஆலுக்கு வேராக வா


268)
உயிரையும் கூறாய்ப் பிரித்து விடுவார்;
இயலுமா நம்உறவை கூறு


269)
சோர்வில் தலைசாய்த்தால் ஆகுமடி உன்மடி
சொர்க்கத்தின் வாசற் படி


270)
பக்கமில்லை என்றால்தான் என்னவாம்; என்மனப்
புத்தகத்தின் பக்கமெல்லாம் நீ

October 25, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்




கடன் :/பொருள்
261)
கடலுக்குள் ஆழ்ந்தவர்க்கும் வாய்ப்புண்டாம்; இல்லை
கடனுக்குள் வீழ்ந்தவர்க்கு வாழ்வு

262)
கடனில்லாக் கூழ்கால் வயிறு கிடந்தால்
கடக்கும் பலநாள் இனிது

263)
திரண்டுருண்டு பேருவம் கொண்டுன்னைக் கொல்ல
வரும்வாங்கும் குட்டிக் கடன்

264)
இடம்செல்வம் சூழ்ந்தநல் வாழ்வை விடவும்
கடனில்லா ஏழ்மை சிறப்பு

265)
வீட்டை அடகாக்கி வாங்கித் திளைப்போர்க்குக்
’கேட்’டில் இடமுண்(டு) உணர்

October 18, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்



உலக நடப்பு : /பொருள்
256)
மொந்தையின் உள்இருந்தால் பாலேதான் என்றாலும்
கள்ளெனவேக் கொள்ளப் படும்


257)
தடையில்லாப் பாதையில்நீ தொட்டதெல்லாம் வெற்றியென்றால்
உன்தேர்வின் மேல்ஐயம் கொ
ள்

258)
மூடும் கதவைக் கவனிக்கும் கண்ணறியா(து)
ஆடித் திறக்கும் கதவு


259)
சிரம்தாழ்த்தி சிந்தனையால் நோக்குவது; வாழ்வின்
சிரமத்தைப் போக்கும் வழி


260)
கெடுவதுபோல் தோன்றிடினும் உச்சத்தைத் தொட்டுவிடும்;
விட்டுக் கொடுத்தவன் வாழ்வு

October 17, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்




ஊடல்...சிறிதே ஊடல்...என்றாலும் !
/இன்பம்

251)
எதிர்வர வேண்டுமெனத் தானெதிர் பார்த்தேன்;
எதிரியாய் வந்தாளே முன்


252)
பந்தம்தான் உண்டாக்க வந்தாய் என்றிருந்தேன்;
பந்தம்ஏன் கொண்டுவந்தாய் நீ


253)
ஆற்றுக்கு போகிறாள் யாரோடோ; ஆறோடும்
போனால் என்ன எனக்கு


254)
நீராடப் போகிறாள் ஆற்றுக்கு; நீரோடு
போனால் மகிழ்ச்சி எனக்கு


255)
துடிப்பாய் நடப்பாள்; துடுக்காய் இருப்பாள்;
கடுக்காய் கொடுப்பாள் எனக்கு

October 9, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்


சொல் /பொருள்

246)
செல்லும் இடத்தில்உன் சொல்செல்லும் தன்மையின்
உண்மை அறிந்துபின் சொல்

247)
சோதனையில் உள்ளோர்முன் நாம்செய்த சாதனையைப்
போதனை செய்யாமல் செல்

248)
மந்தைவெளி முன்நின்று சிந்தைவழி செல்என்(று)
உரைத்தால் பயனென்ன சொல்

249)
நாவினைச் சேர்ந்ததல்ல சொல்வலிமை; கேட்டறியும்
காதினைச் சார்ந்த(து) அது

250)
துடித்தும் வெடித்தும் எதிர்க்கும் பொழுதும்
தடித்தசொல் வேண்டாம் தவிர்

October 3, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்


மகிழ்வில், மனமுறிவில் சில ‘போ’க்கள்..:


241)
தாழும் பொழுதுன்தோள் தூக்கஆள் வந்துநின்றால்
வாழ்நாளை வென்றவன்நீ போ

242)
தன்னலம் இன்றிச் செயல்புரிவோர்க்(கு) எல்லாமும்
தன்னால் அமைந்துவிடும் போ

243)
காத்திருந்தால் வாராது வாழ்வு; உனைச்சுற்றி
காற்றிருந்தும் வீசாது போ

244)
காலின்கீழ் மட்டுமே சுத்தமெதிர்ப் பார்க்காதே;
கீழ்க்குணத்தின் கீழ்அது போ

245)
உன்னை அறியாமல் உண்மை புரியாமல்
வாழ்ந்து பயனென்ன போ