இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 8, 2014

உறவுகள்


அறம்/ உறவதிகாரம் / என்குறள் 441-445 /

தாய்வந்து எனதருகில் தானமர்ந்தால் பின்னந்த
வானுலகு என்பதெல்லாம் பொய்

தங்கையிவள் மொண்டு வரும்கூழும்; கங்கையவள்
கொண்டு தரும்நீரும் ஒன்று

திக்காமல் எத்திக்கும் சொல்வதற்கு அச்சமில்லை;
அக்காவே எம்வாழ்வின் அச்சு

அக்காள் இருக்கும் வரைதான் தொடருமா
மச்சான் உடன்நல் உறவு

சொந்தங்கள் தள்ளியென்னை வைத்தாலும் என்அண்ணன்
தங்கத்தில் செய்துதந்தான் சங்கு

November 19, 2014

அவளதிகாரம் - இயற்கை..இயற்கையைத் தவிர வேறில்லை :


இன்பம்/ இயற்கையதிகாரம் / என்குறள் 436-440 /

இயற்கையைச் சொல்கிறேன்; நீவீர் இயன்றபொருள்
கொண்டால்நான் இல்லை பொறுப்பு
பூத்தாடும் தோட்டத்தில் காவலில்லை என்றானால்
கூத்தாடும் தேனுண்ணும் வண்டு
சட்டெனப் பற்றுமாம் வண்டுகள்; மொட்டுகள்
பட்டெனப் பூக்கும் பொழுது

கொய்யும் தொலைவிலுண்டு கொய்யாக் கனியிரண்டு;
காய்க்குமா கொய்துண்ணும் வாய்ப்பு

தாங்கும்தன் தண்டையும் தொய்திட வைத்திடும்
தூங்கும் பலாப்பல உண்டு

November 14, 2014

மகளதிகாரம்


குழந்தைகள் தின வாழ்த்துகள்

மகளதிகாரம் / /என்குறள் 426 - 435
பால் மாற்றி இதை மகனதிகாரம் எனவும் கொள்ளவும் :))
”என்ன படிக்கிறாய்” என்றேன்; ”படிநீயும்”
என்றுதந்தாள் பாதி கிழித்து
(கரு: நன்றி: Mohamed Ismail Buhari M )

கிறுக்குவாள்; ”என்னஇது” என்பேன்; ”குரங்கு”என்பாள்;
மாறும் குரங்காகக் கோடு

”ஒருஊர்ல” என்றுநான் சொன்னதையேச் சொன்னாலும்
கேட்பாள்; புதியது போன்று

’நரிபாட்டி காக்காக் கதை’யின் நெறியென்ன
என்கிறாள்; என்சொல்வேன் நான்

படித்தாள் மடித்தாள்பைக் குள்திணித்தாள்; வாய்த்தால்
கிடப்பேன்; அவள்கைமுன் தாள்

நடைபயில முந்தும் உனக்கு குடைபிடிக்க
ஏங்கும் உலவும் நிலவு

தூக்கம்:
______________
தூக்கத்தில் புன்னகைக்கக் கற்றுத் தருமவளை
ஏக்கத்தில் பார்த்திருப்பேன் நான்

மூடிக் கிடக்கும் இமையினுள் ஓடி
அலையும் விழிகள் அழகு

அலைபேசியில் (கடல்கடந்த) தந்தை:
___________________________________________
காதுக்குள் ”அப்பாவா?” என்றகுரல் கேட்டவுடன்
கண்ணில் கசியும் கடல்

காதுக்குள் ”அப்பா-வா!” என்றகுரல் கேட்டவுடன்
கண்ணில் கசியும் கடல்

November 10, 2014

இது அழகு


என்குறள் / பொருள் / 421 - 425

பார்வையே அழகு
_____________________


ஊனத்தை வென்றுஅதை உன்குறியீ(டு) என்றாக்கு;
கூன்தானே ஔவைக்(கு) அழகு

முத்துப்பல் காட்டிவரும் சிட்டுக்கள் கூட்டிவரும்
தெத்துப்பல் பாட்டி அழகு

நேர்த்தியாய் செய்யும் செயலுக்குள் நேரும்
தவறுக்கும் சேரும் அழகு

புதரோ பதரோ அழகருகே நின்றால்
அதற்கும் வருமாம் அழகு

இருக்கும் இடமே சிறப்பாம் ஒருவர்க்கு;
இரவே நிலவுக்(கு) அழகு

October 29, 2014

ஏ...இறையே


கடும் கோபத்தின் வெளிப்பாடு ...
சான்றோர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்

கோபக்குறள் / என்குற்ள் 411 - 420

ஏ...இறையே

நல்லவற்றைக் கிள்ளித் தருகிறாய்!; அல்லவற்றை
அள்ளித் தருகிறாய்! ஏன்?

​வாழும் வழிகேட்டு நிற்பவரை வீழ்த்தி
வலிகூட்டிச் செல்கிறாய் ஏன்​ ?

துதித்தவரைத் துன்பத்துள் தள்ளும் தவறு;
மதிதெளிந்த செய்கையா கூறு

சோதனைமேல் சோதனைதந்து உம்குடியை வேதனைக்குள்
தள்ளுவதா சாதனை​?​ சொல்

மெய்தானோ! ”இல்லையென்று சொல்லவில்லை; நல்லது
தான்இருந்தால்” என்போரின் கூற்று


​ஏன் இப்படி ? ​பிடியும்...என் சாபம் படியும் :
துதிப்போரை எற்றி மிதிப்பவரை, போற்றிஇறை
என்போரைத் தூற்றும் உலகு

இறைஞ்சும் அடியவரைக் கைவிடு வோரை
இறையல்ல என்று விடு

இரைகேட்கும் குஞ்சைஇரை ஆக்காது அதன்தாய்;
மறைஇதைச் சொல்வீர் இறைக்கு

துதிப்போரைச் சாய்க்கசதி செய்யும் இறையை
மதிப்போரும் மாய்வார் விரைந்து

​நிழல்வேண்டி நிற்பவரைத் தள்ளிவிடு வோர்க்கு
புழல்வெளியில் உண்டாம் இடம் ​​

October 20, 2014

மடக்கு

(மடக்கு = ஒரு சொல், இரு பொருள்)
//சொற்சிலம்பம் / வார்த்தை விளையாட்டு//

மடக்குக்குறள்:
(ஒரு படம் = இரு உருவம் / வாத்து, முயல் )

406)
படியும் எனநினைத்து பண்பற்றுப் பாய்ந்தால்
படியும் உனைஎதிர்க்கும் பார்

407)
கொடுக்கும் மனத்தைக் கெடுக்கவரும் தேளின்
கொடுக்கும் மடிந்து விடும்

408)
விலங்கும் சிறையும் தவற்றைச்சீர் செய்யும்;
விலங்கும் அறியும் இது

409)
விழும்பொழுதோர் வித்தை விதைத்தெழும் வித்தை
அறிந்தோரே இவ்வுலகின் சொத்து

410)
ஓடு தரும்தருணம் பார்த்திருப்போர் தம்மோடு
கூடிப் பயனில்லை ஓடு

October 14, 2014

ஆணவம்



401)
சித்தர் இருப்பார்தன் உள்மறைந்து; பித்தர்
பறப்பார்தன் ஆற்றல் வியந்து


402)
வீழ்ந்தழிந்த சித்தாந்தம் வாழ்வதாய் எண்ணியே
வாழ்ந்திழிந்து போவோர் உளர்


403)
பகலில் விளக்கேற்றும் பித்தரைச் சுற்றி
இரவில் இருக்கும் இருட்டு


404)
தானென்னும் எண்ணம்தம் உள்கொண்டோர்; தானே
நகர்வதாய்ச் சொல்லும் நிழல்


405)
விட்டுக் கொடுப்பதால் கெட்டுவிட மாட்டாய்;
கெடவேண்டும் என்றால் மறு

October 11, 2014

கவனித்துக் கணித்த சில....!




396)
கருவுற்ற வெண்மேகம் கார்வண்ணம் பெற்றபின்
பெய்யும் மழைவண்ணம் சொல்


397)
முன்தத்திச் செல்லும் தவளையைப் பின்பற்றிப்
போகிறது கண்கொத்திப் பாம்பு


398)
மோணம் திறந்து வழிகிடைக்கும் நாள்வரையில்
மோனம்தான் பாம்பின் மொழி

(மோணம் =பாம்புப் பெட்டி, மோனம் = மெளனம்)

399)
மழையழகாம் தூறும் பொழு(து)ஆம்; அதுவே
பிழையாகும் மீறும் பொழுது


400)
தலையின் மலருக்கு வீழாது வண்டு;
வளைதாண்டி வாழாது நண்டு

October 8, 2014

பெண்ணே...பெண்ணே....!


391)
பால்நிலவைப் பாற்கடலில் தோய்த்(து)அவள்முன் போஎன்றேன்;
மேலும் வெளுத்த(து) அது

392)
மானவளை வென்றுவிட்ட பின்பு; துவண்டதுகண்(டு)
ஆனேன்நான் அம்புபட்ட ஒன்று

393)
மயிலும் துயிலும் ஒயிலாள்; குயிலும்
பயிலும் ஒலியாள் இவள்

394)
எனதளவில் எல்லாம் எளிதென்று இருந்தேன்
உனதழகைக் காணும் வரை

395)
உந்தன் இருவிழியில் முந்தும் சிறுதுளியும்
எந்தன் கருத்தழிக்கும் அம்பு

September 29, 2014

அவனிடமும் பேசுவேன் நான் !


இறைவன் / அறக்குறள்
386)
கடவுள்நீ என்முன் வரவேண்டும் என்றேன்;
கடஉள்நீ என்றான் அவன்


387)
வருவாய் குருவாய்; மலர்வாய் ஒருவாய்;
வருவாய் அதுவே எனக்கு


388)
தருவாய் தரிசனம் கண்ணுக்(கு); அதுபோல்
தருவாய் வருமோ எனக்கு


389)
கற்பனையாய்க் கற்பானை; சொற்பனையாய் விற்பானை;
அற்பனெனை காத்தணைப்பாய் நீ


390)
கறைகள் மறைந்து மறைகள் அறிய
இறைமுன் கரைதல் முறை

September 25, 2014

இயற்கையும் ஆசானே ...!


மரக்குறள் / பொருள்


381)
அழிவில்லை என்போர் அறிந்ததில்லை போலும்
கிளையில் இலையின் நிலை

382)
பழம்மட்டும் தானா அழகு; பழுத்து
விழும்இலையும் தானே அழகு

383)
ஆல்வைத்து வாழ்ந்தார்நம் முன்னோர்; வளர்ந்ததை
ஆள்வைத்துச் சாய்க்கிறோம் நாம்

384)
வாழைதலை சாய்ப்பது தன்குலையைக் காப்பதற்கு;
கோழைத் தனத்தினால் அன்று

385)
முயற்சி விதையாம்; முளைத்தால் மரமாம்;
புதைந்தால் உரமாம் பிறர்க்கு


September 9, 2014

சில குறிப்புகள் உனக்கு


சில குறிப்புகள் உனக்கு / பொருள்

376)
இருகையும் சேர்ந்தே உழைத்தாலும் உண்ண
ஒருகைக்குத் தான்தருவார் வாய்ப்பு

377)
சுள்ளிவெட்டும் வேளையில் சொல்லிவிட்டுத் தான்குத்தும்
முள்ளென்று எதிர்பார்த்தால் தப்பு

378)
கண்ணொன்றில் நீர்வடிந்தால் இன்னொன்றும் சேர்ந்தழுமே
தன்னால் உணர்வதுவே நட்பு

379)
வணங்கிமுன் நிற்போரைக் காட்டிலும் இன்னும்
பணிவாய் வணங்கப் பழகு

380)
அகலக்கால் வைக்காமல் ஆழம் புதைத்தால்
அகலும்;கால் சூழும் இழுக்கு

June 3, 2014

இன்பம் - அவனும் , அவளும் ..!


அவன் :
371)
சொத்தை இருந்தால்தான் என்னஎன் தத்தையிடம்;
சொத்தை எழுதிவைப்பேன் நான்

372)
சொத்தையுள் மெத்தையின் வித்தையின் உத்தியின்
வித்தையை வைத்தது எது


அவள் :
373)
உம்மையொன்று கேட்பேனாம்; உம்மென்று நில்லாமல்
உம்மென்று சொல்வீராம் நீர்

374)
உலகைவசம் செய்வானாம்; நல்லது அவனையே
என்கவசம் ஆக்குவேன் நான்

375)
பாயும் அவன்வேகம் கண்டு மிரண்டொதுங்கும்
பாயும் பயந்து புரண்டு

April 27, 2014

இருவரியில் சொல்வேன்...இருப்பதச் சொல்வேன் - தூதுக்குறள் / பொருள்


விழி,அறி...! :)

366)
விடியும் வரையில் முடங்கிக் கிடந்தால்
விரைந்து முடியும் பொழுது

367)
முடிந்த வரையில் முடக்கம் தவிர்த்தால்
விரைந்து விடியும் பொழுது

368)
தலையில் இருந்தால்தான் கூந்தல்; தரையில்
கிடந்தால் அதன்பெயர் வேறு

369)
பாதி வரையும் படித்தறியும் பாடம்தான்
மீதி வழியின் விளக்கு

370)
ஒருவிரல் முன்சுட்ட மற்றதுமேல் நோக்க
மறுமூன்றும் காட்டும்உன் நெஞ்சு

April 2, 2014

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்



என்னவனே..மன்னவனே..!​

​361)
​​நீர்வார்க்கும் மண்ஆகும் பாத்திரமாய்; பத்திரமாய்

நீர்வாரும்; காய்ந்திருப்பேன் நான்

​362)​
விழிமூடும் வேளையெல்லாம் ​,​ எந்தன் வழிமூடி

முன்வந்து நிற்பான் அவன்

​363)​
ஒளிந்திருப்பான் எங்கோ; உணர்ந்து, மழைக்கால

மண்போல் கரையும் மனது

​364)​
அடக்கிவைப்பேன் எ ​ன்(று)எள்ளி ஆர்ப்பரிப்பான்; மெல்ல

அடங்கித்தான் போவான் பிறகு

​365)​
என்னையன்றி வேறொருவள் வந்தாலும் நீயாவாய்

எண்ணெயின்றித் துள்ளும் கடுகு

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-அறம்


(இறை)அவன் வணக்கம்:

356
அருவில் உருவாய்; கருவில் தருவாய்
மறைந்தே இருப்பான் அவன்

357
உருவில் அருவாய்; தருவில் கருவாய்
உறைந்தே இருப்பான் அவன்

358
வெளியில் வளியாய்; வழியில் ஒளியாய்
நிறைந்தே இருப்பான் அவன்

359
அறியார்க்(கு) அரியன்; அறிதற்(கு) எளியன்
அடியர்க்(கு) அடியன் அவன்

360
வினையறுக்க வேண்டும்; முடிக்கும் வரையில்
துணையிருக்க வேண்டும் அவன்
.

இருவரியில் சொல்வேன்...இருப்பதச் சொல்வேன் - தூதுக்குறள் / பொருள்


ஏன்..ஏன்..ஏன் ?!!!!!!!!!!!!!!!!!!!!!
351)​

கொள்ளையர் வாழ்வதும் தன்நலம் இல்லாத

கொள்கையர் வீழ்வதும் ஏன்


​352)​

வேலிக்கு அருகில் நடப்பதைக் காணாத​

போலிகளாய் மாறியதும் ஏன்


353)​

கண்முன் நிகழும் இழிச்செயலைக் கண்டிக்கும்

தன்மை அழிந்ததும் ஏன்


​354)​

உள்ளதை உள்ளபடி சொல்லிவிடும் வெள்ளையுள்ளம்

இல்லாமல் போனதும் ஏன்


​355)​

உண்மையை ஊட்டிவிட்டு நல்வழியைக் காட்டிவிடும்

தன்மையின்றிப் போனதும் ஏன்