இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 30, 2015

இளையோரே ... சோதிப்பீரா ஏற்பீரா !


“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!


இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" ​

--- சுயபரிசோதனை ---
1)
விழுந்ததெங்கு என்பதைப் பாராது உனக்கு
வழுக்கியதெங்கு என்பதைப் பார்

2)
கூறியது யாரென்று பாராது; பாருக்குக்
கூறியது யாதென்று பார்

3)
வழித்தெறியும் முன்புஅறி; உள்ளிருக்க்க் கூடும்
வழிதெரிய வைக்கும் குறிப்பு

4)
கற்றதைக் கற்றுத் தரமறுக்கும் குற்றமனம்
கொண்டோரை விட்டு விலகு

5)
பாதி தெரிந்துகொண்டும் மீதி புரிந்துகொண்டும்
சேதிபுனை வோரை ஒதுக்கு


--- பொதுவாய் சில ---
6)
தரத்தினை உன்திறம் என்று கொண்டால்
வரும்உன்னைத் தேடி வரம்

7)
ஒளியூட்டும் உன்செயல் ஒன்றால் ஒளியட்டும்
மன்றத்தார் உள்ளத்து இருள்

8)
யாரெவர் என்றெதுவும் பாராது உதவநினை;
ஊருலகும் வாழ்த்தும் உனை

9)
செல்வாக்கு செல்வத்தைச் சேர்ந்ததன்று; சொல்வாக்கின்
சுத்தத்தைச் சார்ந்தது அது

10)
நானென்று நிற்காமல் நாணாமல் நாணலைப்போல்
நன்றாய் வளைவோர்க்கே வாழ்வு

No comments: