இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 29, 2016

பகைச் சிறப்பு ...!



676)
உனைஅறிய வேண்டுமெனில் உற்றுப்பார் உன்பகையை;
எல்லாம் தெரியும் அவர்க்கு


677)
சிறந்த எதிரியைத் தேர்ந்துன் உறவாக்கு;
எதிர்காலம் ஆகும் இலகு


678)
பகைத்தும்உன் அந்தரங்கம் காக்கப் படுமென்றால்;
அப்பகையை நட்பாக்கிக் கொள்


679)
வெற்றி அடைந்திட வேண்டுமெனில்; சுற்றி
இருந்திட வேண்டும் பகை


680)
புகையும் மனம்கொண்ட நட்பைவிட; கொல்லும்
பகையின் உறவு சிறப்பு


April 26, 2016

நபி மொழி - 2 ..... தொழுகை ..!


671)
வலுவாய் உயர்வான் ஒருவன்; தொழுகையை
நோக்கி நகரும் பொழுது
.......................புகாரி

672)
பிறர்தொழ, முன்வந்து இடம்தர, யாரும்
சுருங்கத் தொழுவதும் நன்று
...................புகாரி 90

673)
உரிய பொழுதில் இறையைத் தொழுவது
உயரிய நற்செயல் ஆம்
........................புகாரி 527

674)
குறிகேட்டாய் என்றால் குறைக்கப் படும்;நாற்
பதுநாள் தொழுத கணக்கு
.........................முஸ்லிம் 4488


675)
விருப்பத் தொழுகையை வீட்டில் செலுத்து;
கடமைத் தொழுகைத் தவிர்த்து
................இன்னுகுஸைமா 1143
(அல்லது)
கடமைத் தொழுகைக்குப் பள்ளி; விருப்பத்
தொழுகைக்கு வீடு சிறப்பு

April 25, 2016

முத்தவியல் !



முத்தவியல் ... முத்த அவியல் !


666)
முடித்து விடுவோமா முத்தத்தோடு என்றானே;
முற்றாதது என்பது அறிந்து


667)
உன்மத்தம் கொண்டலையும் உன்னைச் சரியாக்க
என்முத்தம் ஒன்றே மருந்து


668)
சிப்பிக்குள் முத்தொன்றைக் கண்டெடுத்தேன்; முத்தென்றேன்
கேட்டவுடன் முத்திவிட்டான் ஏன்


669)
இசென்றேன்; உச்சென்றாள்; பச்சென்றென் உச்சியில்
நச்சென்று வைத்தாளே ஒன்று


670)
யுத்தத்தில் நாளும்தான் தோற்பேன்ஆம்; தண்டனையாய்
முத்தத்தைத் தின்பவன் நான்

April 23, 2016

புத்தகமே புத்தகம் !


சிறப்பு : இன்று புத்தகதினம் !

மேலும் ஒரு சிறப்பு(எனக்கு) : ஐயனோடு சேர்ந்து ஐயனின் இலக்கை(1330) ஒருமுறை முடித்தபின்னர்... என்வழிலில் என்குரலை .. என்குறளால் ..ஐயனில் பாதியை மீண்டும் ஒருமுறைத் (665) தொட்டிருக்கிறேன் என்பதில் பெருமைதான் (எனக்கு)



661)
நூல்பிடித்துச் சீரான பாதையில்உன் வாழ்வை
வழிநடத்தும் நீபடிக்கும் நூல்


662)
நூலைப்போல் சேலைஆம்; இன்றுநீ தேரும்நூல்
நாளைவழி காட்டும் உனக்கு


663)
புள்ளியில் தான்தொடங்கும் நேர்க்கோடு; பள்ளியால்
தானமையும் நேர்வழி வாழ்வு


664)
முன்னுள்ளோர் சொல்தவிர்த்து முன்னோரின் சொல்உயர்த்து;
தன்னால் சிறக்கும்உன் வாழ்வு


665)
பழம்பெரும் சொற்பொருளைப் புத்திக்குள் ஏற்று;
பலம்பெறும் இவ்வுலக வாழ்வு


April 18, 2016

உன் வழியைத் தேர்ந்தெடு ..!


656)
நூல்படித்தச் சான்றோரின் தோள்பிடித்துச் செல்வோரின்
வாழ்வமையும் எண்ணியது போல்

657)
கற்றவரைப் பின்தொடர்ந்தால் பேறு;செல்வம் பெற்றவரின்
பின்சென்றால் உன்கதை வேறு

658)
இக்கட்டில் உள்ளோரின் சொற்கேட்டுப் பின்தொடர்ந்தால்
சிக்கலுக்குள் சேர்க்கும் அது

659)
தீரருடன் பேசாமல் பின்போதல் என்பதுதேன்;
மூடருடன் பேசுவதும் வீண்

660)
யார்பின்னும் சேராமல் நேர்வழியை நீதேர்ந்தால்
ஊர்உன்னைப் பின்தொடரும் பார்

April 16, 2016

நபி மொழி - 1 ..... என் வழி ..!


வாழ்க உறவுகள் ....
நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்...எல்லாரையும் சென்றடையும் வகையில் எளிய குறளில் என்நடையில் பதிக்கவேண்டும் ..என்னும் எனது நீண்டநாள் கனவுத்திட்டத்தின் முதல்ப்படி இது .... அன்பு உள்ளங்கள் வழிகாட்டினால் தொடர்வேன் ..
( முக்கியக் குறிப்பு : வழிகாட்டி யாரும் இன்றி ... அவனை நம்பி.. சுயமாய் / சுயம்பாய்த் தொடங்கி இருக்கிறேன்... குற்றம் குறை இருந்தால், மாற்றுக் கருத்திருந்தால் குட்டிச் சொல்லுங்கள்... நன்றென நினைத்தால் தட்டி முன்செலுத்துங்கள் )

என்குறள் :- 646 - 655
பாட்டன் திருக்குரலை_பாட்டாய், திருக்குறளாய்
ஏட்டில் விதைப்பேன் இனி

நபி மொழிகள்:


இறையை எதனோடும் செய்யாதீர் ஒப்பீடு;
அறிவீர் அவர்க்கில்லை ஈடு
./அல்குர்ஆன் 19:74

அணுஅளவு தீதோ அணுஅளவு நன்றோ
அனுபவிப்பார் செய்தோர் அதை
./அல்குர்ஆன் 99:7,8

கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கவனம்
தவறித் தொழுவோர்க்குக் கேடு
./அல்குர்ஆன் 107: 5,6,7


கூடும்நற் செல்வமுடன் நீண்டநாள் வாழ்ந்திட
கூட்டுக் குடித்தனம் செய்
./புகாரி 2067


தன்உழைப்பால் வந்தடையும் எவ்வுணவும் இவ்வுலகில்
ஆகச் சிறந்த உணவு
./புகாரி 2072

தங்கத்தில் ஆனதட்டில் உண்போரின் அங்கத்துள்
சேரும் நரக நெருப்பு
./புகாரி 5634


உருவோஉன் கைஇருப்போ அன்றி பிறர்க்(கு)உருகும்
உள்ளம் இறையின் விருப்பு
./முஸ்லிம் 5012

தற்பெருமை உன்னுள் கடுகளவே சேர்ந்தாலும்
சொர்க்கத்தில் இல்லை இடம்
./முஸ்லிம் 131

புறம்பேசும் வீணருக்குச் சொர்க்கத்து அருகில்
வருவதற்கும் வாராது வாய்ப்பு
./முஸ்லிம் 168


April 14, 2016

தமிழ் ..!


உறவுகளுக்கென் இனியநாள் வாழ்த்துகள் !
641)
இங்குமுள்ள தங்குமுள்ள தெங்குமுள்ள தென்றுமுள்ள
என்தமிழ்த்தாய் முன்வைத்தேன் வாழ்த்து

642)
புலம்பெயர்ந்தோர் வாயில் நிதம்புழங்கி நாளும்
பலம்பெற்று நீளும் தமிழ்

643)
இகழ்ந்துமிழ்ந்து கொல்லவரும் சொல்தமிழ் என்றால்
அமிழ்தெனவும் கொள்வோர் உளர்

644)
அமிழ்தாய் எதையோ நினைத்தாய் அமிழ்ந்தாய்;
உணர்வாய் தமிழ்தான்உன் தாய்

645)
தமிழுக்குச் செய்யாதே; செய்வதைச் செய்தமிழில்;
தானே செழிக்கும் தமிழ்



April 8, 2016

தேர்தல்:-... ஓட்டு....துட்டு.....வெட்டு !!!!



636)
தேர்தல்நாள் தேர்வதற்கு; கையூட்டுப் பெற்றோர்க்கு;
கூரில்லா ஆப்படிக்கக் கூறு

637)
கடமைக்குக் கையேந்தும் கீழோர்; கிடைத்ததைக்
கவ்வும் கடிநாய்க்கும் கீழ்

638)
கையேந்தி கையூட்டு வாங்கிவிட்டு; கைநீட்டி
ஓட்டிட்டால் அக்கையை வெட்டு

639)
ஐந்தாறு பேர்சேர்வார்; ஐந்நூறைத் தந்தேனென்று
ஐந்தாண்டு உனைத்தின்பார் மென்று

640)
எச்சிலிடம் கையேந்தி; உச்சியிலும் ஏற்றிவைத்து;
ஏமாறும் மூத்த குடி

April 6, 2016

அப்பா ....!


இன்று அப்பாவின் நாள் .... அந்தநாள் நினைவோடு நான்...............!
631)
எந்தையிடம் கேட்டேன் வரமொன்று; சொன்னான்உன்
தந்தைதான் அந்தவரம் என்று

632)
தந்தைமை என்னவென்று நானறிந்தேன்; என்சொந்தக்
கால்ஊன்றி நிற்கும் பொழுது

633)
திட்டியபின் தாயைவைத்துத் தட்டித் தரும்தகப்பன்
ஆயிரத்து எட்டுத்தாய்க்கு ஒப்பு

634)
என்றும் நடித்ததில்லை என்றாலும் நம்கதையின்
நாயகன் நம்தந்தை தான்

635)
அன்போடு பின்தொடரும் அப்பாவை அம்போடு
அலைபவராய்ப் பார்க்கும் உலகு

April 5, 2016

பாட்டி வைத்தியம் !!

ஒரு புதிய முயற்சி :
நம் பாரம்பரிய .,இயற்கை மருத்துவத்தை , பாட்டி வைத்தியத்தை... குறளில் பதிய முயன்றிருக்கிறேன், ஆதரவு கிடைத்தால் தொடர்வேன் :)

626)
கருத்தரிக்க வைக்கும் அணுக்கள் அதிகரிக்க,
கத்தரியை உன்உணவில் கூட்டு

627)
மூட்டு வலியை முழுவதும் போக்க,
முடக்கத்தான் கீரை கொடு

628)
சுக்கு பனைவெல்லம் வாயில் சிறிதொதுக்கு;
சுக்கலாய்ப் போய்விடும் வாய்வு

629)
நாளும் பருப்புமணத் தக்காளி உண்போர்க்கு
மூலம் சரியாகும் ஆம்

630)
கற்றாழை சூழ்ந்த உணவு முறைஅமை;
கற்றோர் வியப்பார் உனை


April 4, 2016

எதிரியை முதலில் அறி !


621)
பலம்கொண்டோம் என்று பலரைப் பகைத்தால்
பயனின்றிப் போய்விடும் வாழ்வு

622)
எதிரியில்லை என்றாலும் வீழ்த்திவிடும்; வீழ்த்த
எதிரியில்லை என்னும் செருக்கு

623)
தனைஎதிரி தாண்டும் பொழுது; தளைஉதறி
முந்தார்முன் நிற்கும் முடிவு

624)
எதிர்க்க முடியாத ஒன்றெதிர் நின்றால்
தவிர்த்து விடுவது நன்று

625)
பெறப்போகும் வெற்றிஉன் முன்வரப் போகும்
எதிரின் திறத்தைப் பொறுத்து