இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 16, 2017

எமன்.... நெகிழி.... ! (ப்ளாஸ்ட்டிக் )



936)
நெகிழியில் சூடாய்த் தரும்உணவு ஆகும்,
தகழியின் மத்தியில் நஞ்சு

(தகழி = தட்டு)

937)
இளநீர் குடிக்க, நெகிழிக் குழாய்நட்ட
அன்றே விதைத்துவிட்டோம் நஞ்சு


938)
நெகிழியை ஊரில் விதைத்தாய், அரிசிக்குள்
வந்து விளைகிறது பார்


939)
வெண்கொக்கு அலைந்த வயல்வெளி எங்கிலும்
நுண்நெகிழிப் பைபறக்கும் இன்று


940)
மண்பானை வாழையிலை மஞ்சள்ப்பை கொன்று,
நெகிழிக்குத் தந்துவிட்டோம் வாழ்வு


941)
பாழ்மதுவோ பாட்டிலில் பாதுகாப் போடுவரும்,
பாழ்நெகிழிப் பாக்கெட்டில் பால்.


942)
நெகிழியில் உண்போர் அறியார், மெழுகையும்
சேர்த்துத்தான் உண்கிறோம் என்று


943)
நெகிழிக்கு உரம்சேர்க்கப் பூசும் மெழுகு,உள்
சேர்ந்தால் அழுகும் குடல்


944)
மகிழ்வில் நெகிழியில் உண்டால், அழிவுள்
அமிழ்ந்து விடும்வரும் வாழ்வு


945)
நிகழாமல் நின்றுவிடும் வாழ்வு, நெகிழியாய்
மூளையும் மாறிய பின்பு

2 comments:

I AM naagaraa said...

மெய்யை சிதைக்கும் உயிரை அழிக்கும்
நச்சாம் நெகிழிக் கஞ்சு

விழிப்புணர்வூட்டும் எச்சரிக்கும் வெண்பாக்கள் அருமை, வாழ்த்துக்கள் துரை

I AM naagaraa said...

நெகிழா திறுகிய மனிதம் உன்னை
நெகிழி இறுக்கிக் கொல்லும்